Thursday, October 17, 2013

போகர்,கோரக்கரின் சீனதேச பயணம் மற்றும் ஜீவசமாதி


போகர்,கோரக்கரின் சீனதேச பயணம் மற்றும் ஜீவசமாதி

bogarஆனந்தித் துடனே யருள் ஞானம் பெற்று
அம்பிகையின் கடாட்சத்தா லவனி மீதே
போனகங்க ளுண்டு புகழ் பொருந்தி நின்றேன்
போகரவர் சித்தாடப் போவோ மென்றார்
கானகத்தை விட்டு விட்டக் கணமே நாடிக்
காசி நகர் சிதம்பரமுங் கடந்து பின்பு
தானமுற்றுப் பழனிதனில் தங்கிச் சின்னாள்
தந்திரமாய் சித்தாடப் பெற்றேன் பின்பாய் – சந்திரரேகை 200 கோரக்கர்

குருவின் ஆசி கிட்டியதும் ஞானம் பெற்று அம்பிகையின் அருளால் புகழோடு வாழ்ந்து வந்தேன். போகர் வந்து நம் பலசித்துக்களை அடையவேண்டும் என்று கானகத்தை விட்டு காசிநகரம் மற்றும் சிதம்பரம் கடந்து பழினியை அடைந்து அங்கேயை வாழ்ந்து வந்தோம். அங்கு பல சித்துக்களை பெற்றேன் என்கிறார்.
 பின்பாக அவ்வழியைப் பேத மின்றிப்
பேசிடுவேன் தழைத்து உயிர் ஓங்கி வாழ
நன்மையுடன் கற்பவகை நானும் போகர்
நாடியுண்ட விபரமதை நவில்வே னுண்மை
அன்புடனே போகரவர் அநேக சித்து
ஆடியதோர் அதிசயங்கள் உண்டு
தென்பாகப் பழனி விட்டுச் சீன தேசம்
தீவிரமாய்ச் சென்றோம் பாருலகில் யாமே – சந்திரரேகை 200 கோரக்கர்

பின்பு நான் பெற்ற அந்த சித்துக்ளின் வழியை சொல்லிவிடுவேன் இந்த உலகம் தழைத்து ஓங்க. நானும் போகரும் பல கற்ப மருந்துகளை உண்ட விவரத்தை உண்மையுடன் கூறுவேன். அன்பே உருவாகிய போகர் நிகழ்த்திய அதிசயங்கள் பல உண்டு. நாங்கள் வாழ்ந்து வந்த பழனியை விட்டு சீன தேசத்திற்கு சென்றோம். இங்கிருந்து சீனதேசம் சென்றவர்கள்யாமே.
பாருலகில் மாந்தர் களுக்காயு ளோங்கப்
பாவையர்கள் தங்களை யாம் கலவி செய்தோம்
சீருடனே வருடமைஞ்நூறு சீனத் துற்றுச்
சிறப்புடனே ஆண்டு நானூறு பொதிகை நின்றோம்
காருலவும் பழனிநகர் கடுகி வந்து
கந்தருட கடாட்சங்கள் அடைந்தோம் பின்னர்
பேருறையுஞ் சித்தரெலா மெங்களைத் தான்
பிடித்தறிய வெண்ணினார் புகல்வே னன்றே. – சந்திரரேகை 200 கோரக்கர்

இந்தவுலகில் மனிதர்களுக்கு ஆயுளோங்கப் பல நன்மைகளை செய்தோம் என்று கூறுகிறார் என்று நினைக்கிறேன். ஐநூறு வருடம் சீன தேசத்தில் வாழ்ந்ததாக கூறுகிறார். பிறகு பொதிகையில் நானூறு வருடமும் இருந்து பிறகு, மீண்டும் பழனியை வந்தடைந்தனர் என்று கூறுகிறார். கந்தனின் சிலையை செய்த பின்னர் பல சித்தர்கள் வந்து இதன் இரகசியத்தை அறிய எண்ணினர். அதை அவர்களுக்கும் சொல்லுவேன் என்றேன்
புகன்றிடுவேன் போகரவர் பெருமை தன்னைப்
பூவுலிகில் யாவர்களும் பொருந்தி மேவ
அகம் மகிழ போக நாதர் பழனி தன்னில்
அடங்கிடுமுன் பாகத்தன் வரலாறு முற்றும்
இகம் அறிய செனன சாகரமுஞ் செப்பி
எனையழைத்து உரகை எனும் பதிக்கே கென்றார்
தகைமையுறச் சித்தரையான் அடக்கம் செய்து
தட்டாமல் உரகையுற்றப் பார்த்திட்டேனே. – சந்திரரேகை 200 கோரக்கர்

போகரின் அடக்கமாகும் முன் அவருடைய வரலாறு மற்றும் அவரின் செயல் திறனை அறிய சாகரம் என்ற நூலில் எழுதிவைத்தார். போகர் என்னை அழைத்து உரகை என்ற நகருக்கு போயிரு என்று ஆனையிட்டார் அவர் சொன்ன வண்ணமே போகர் ஜீவசமாதியை அடைந்ததும் நான் உரகை சென்றுவிட்டேன்.
பார்த்திருந்த சித்தர்களை பார்க்க வைத்தே
பக்குவமாய்ப் போகரவர் தயங்கிடாமல்
சீர்நிறையென் போலவரை ஏய்த்துக் போட்டுச்
சிதறாமல் உரகையினில் என்னைக் கண்டார்
போர் விளங்கப் புதுமையுடன் எனையழைத்துப்
பொய்கை நல்லூரென்றிடப் பூங்கா சென்றார்
நேர்மையுடன் எனக்கடக்கம் நிலைமை காட்டி
நெடிய கடல் தாண்டி மறுதேசம் போனார். சந்திரரேகை 200 கோரக்கர்

போகர் அடக்கம் ஆன இடத்தில் பல சித்தர்கள் இருக்கும்போதே என் போல் உருவம் எடுத்து உரகை வந்து எனைக் கண்டார் பிறகு என்னை பொய்கை நல்லூரில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றார் அங்க என்னை அடக்கம் செய்து இறாவநிலைமையை காட்டி சென்றார்.

1 comment: